உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கடலுக்குள் கொண்டு செல்லக்கூடாது உயர்நீதிமன்றத்தில் தகவல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கடலுக்குள் கொண்டு செல்லக்கூடாது உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: கன்னியாகுமரி மாவட்ட கடலில் மீன் பிடிக்க பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தி மாசுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கடலுக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கை அகற்ற பெரிய அளவிலான துாய்மைப் பணி நடைபெறும்,' என தமிழக அரசு தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. இனயத்தை சேர்ந்த லெனின் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் முதல் தேங்காப்பட்டணம் கடல் பகுதிவரை கணவாய் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சிலர் விதிகளுக்கு புறம்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், தென்னை மட்டைகள், தென்னை நார்கள், மணல் மூடைகளை கடலில் போடுகின்றனர். அம்மீன்களை பிடிக்கின்றனர். கடல் மாசுபடுகிறது. மீன்களின் வயிற்றில் பிளாஸ்டிக் துகள்கள் செல்கிறது. அம்மீன்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு நோய் ஏற்படுகிறது. மீனவர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தி கடலினை மாசுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை கோரி கலெக்டர், மீன்வளத்துறை துணை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹெரால்டு சிங் ஆஜரானார். மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனு: விதிகளை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 2 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது புகார் அளிப்போரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கடலுக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற பெரிய அளவிலான துாய்மைப் பணி நடைபெறும். இவ்வாறு குறிப்பிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள்,'அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ