பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பால் பழனிசாமிக்கு சிக்கல்
மதுரை: தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரன் வெளியேறிய நிலையில், த.ம.மு.க., ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம், தினகரனும் வெளியேறியுள்ளனர். தொடர் எதிர்ப்பு கூட்டணியில் இருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், '15 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தும் எந்த பலனும் இல்லை' என புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலை கணக்கிட்டு 'நடுநிலை'யுடன் கருத்து கூறி வருகிறார். நேற்றுமுன்தினம் திண்டுக்கல் எழுச்சி பயணத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்' என பழனிசாமி வாக்குறுதி அளித்தார். இதற்கு கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செப்.,11ல் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க., தரப்பில் யாரும் வரக்கூடாது என தேவேந்திர பண்பாட்டுக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டணியே பலம் தற்போதைய சூழலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உடையும்பட்சத்தில் தி.மு.க.,வுக்குதான் சாதகமாக அமையும். 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி 45.4 சதவீதம், அ.தி.மு.க., கூட்டணி 39.7 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. அ.தி.மு.க., மட்டும் 33.29 சதவீதம் ஓட்டுகள் பெற்று 66 இடங்களை கைப்பற்றியது. 2016ல் தனித்து போட்டியிட்ட போது 40.88 சதவீதம் ஓட்டுகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. 2026 தேர்தலில் உட்கட்சி விவகாரம், த.வெ.க., நா.த.க., பிரிக்கும் ஓட்டுகளால் அ.தி.மு.க.,வுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் வரும் தேர்தலில் த.வெ.க., 7 சதவீதமும், நா.த.க., 10 சதவீதமும் ஓட்டுகள் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில் பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.,வின் நிலை ஜனவரியில் கடலுார் மாநாட்டில் தான் தெரியும். பா.ம.க.,வில் அன்புமணி பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், ராமதாஸ் எதிராகவும் உள்ளதால் குழப்பம் நீடிக்கிறது. இப்படி அடுத்தடுத்து பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.