மதுரையில் பாலப்பணிகள்: சிலைகள் இடமாற்றம்கலெக்டர் தலைமையில் குழு பரிசீலித்து முடிவு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம், சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அப்பகுதியிலுள்ள 6 சிலைகளை வெவ்வேறு இடங்களில் மாற்றியமைக்க மாநகராட்சி தரப்பு பரிந்துரைத்ததை கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து முடிவெடுக்கும் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை கனகவேல் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு 1981 ல் மதுரை தல்லாகுளம் பகுதியில் தமிழக அரசால் சிலை அமைக்கப்பட்டது. அரசு தரப்பில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சிலையை அகற்ற முயற்சி நடக்கிறது. அகற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின்போது மாநகராட்சி தரப்பு தெரிவித்தாவது: கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல், சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இச்சாலையின் தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியிலுள்ள உ.வே.சுவாமிநாத அய்யர் சிலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் சிலை ஆகியவை உலகத் தமிழ்ச்சங்கம் அருகே நீச்சல்குளம் பகுதியிலுள்ள மாநகராட்சி படிப்பகத்திற்கு மாற்றப்படும். தமுக்கம் தமிழன்னை சிலை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், தியாகிகள் நினைவுச் சின்ன ஸ்துாபி மாநகராட்சி அலுவலக வளாகம், நேரு சிலை மாவட்ட நீதிமன்றம் எதிரே முக்கோண வடிவ பூங்காவிற்கும் இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அஸ்வின் ராஜசிம்மன் ஆஜரானார். அரசு பிளீடர் திலக்குமார்: சிலைகள் அமைத்தல், வேறு இடத்திற்கு சிலைகளை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு மாநகராட்சியின் பரிந்துரையை பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.