| ADDED : ஜன 18, 2024 06:30 AM
மதுரை : மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) வாகன ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் வாகன பதிவுப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.மாவட்டத்தில் தெற்கு, வடக்கு, மத்தி ஆர்.டி.ஓ., அலுவலகங்களும், உசிலம்பட்டி, திருமங்கலம், மேலுார், வாடிப்பட்டியில் யூனிட் அலுவலகங்களும் செயல்படுகின்றன. இவற்றில் யூனிட் அலுவலகங்களில் தலா ஒரு வாகன ஆய்வாளர் உள்ளதால் பணிகளில் பிரச்னை இல்லை.அதேசமயம் மதுரை நகருக்குள் உள்ள 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் வாகன ஆய்வாளர்கள் இல்லாமல் அதிகாரிகள் பரிதவிக்கின்றனர். மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் 5 வாகன ஆய்வாளர் பணியிடங்களில் 2 ஆண்டுகளாக ஒருவர்தான் உள்ளார். இங்கு தினமும் 200 வாகனங்களாவது பதிவு, தகுதிச்சான்று உட்பட பல்வேறு பணிகளுக்காக வரும். தவிர டிரைவிங் லைசென்ஸ், வாகன சோதனை என பல பணிகளும் உள்ளன. ஆய்வாளர் பற்றாக்குறையால் ஆர்.டி.ஓ.,வும் அவர்களின் பணிகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதேபோல மதுரை வடக்கு அலுவலகத்தில் 3 ஆய்வாளர்களுக்குப் பதில் 2 பேரும், மத்திய அலுவலகத்தில் 3 பேருக்கு ஒருவருமே உள்ளனர். இந்த அலுவலகங்களுக்கும் தினமும் பல நுாறு வாகனங்கள் வருகின்றன. போதாக்குறைக்கு மதுரை வடக்கு அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பணியிடமே காலியாகத்தான் உள்ளது. இதனை மத்திய அலுவலக ஆர்.டி.ஓ., கூடுதல் பணியாக கவனிக்கிறார்.அதிகாரிகள் கூறுகையில், ''வாகன ஆய்வாளர் பணிக்கு தேர்வானவர்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நியமனத்தில் பிரச்னை உள்ளது. வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து வாகன ஆய்வாளர்களை உடனே நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றனர்.