திருப்பரங்குன்றம்: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட, 113 பேர் மீது ஏழு பிரிவுகளில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன்தினம், திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் வந்து, தொண்டர்களுடன் மலைக்கு செல்ல முயன்றார். அங்கு, 144 தடை உத்தரவால், அவர் மேலே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பின், நீதிமன்ற உத்தரவுப்படி, மலை மேல் தீபம் ஏற்ற செல்ல நின்று கொண்டிருந்த ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமாரை சந்தித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என, கோஷம் எழுப்பினர். கலைந்து செல்ல போலீசார் கூறியும் அங்கேயே நின்றதால், நயினார் நாகேந்திரன், நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்து, நள்ளிரவில் விடுவித்தனர். நயினார் நாகேந்திரன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உட்பட, 113 பேர் மீது, அனுமதியின்றி கூட்டம் கூட்டுதல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் உட்பட ஏழு பிரிவுகளில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து, திருச்சியில் போராட்டம் நடத்திய, 50 பேர் கைது செய்யப்பட்டனர்.