குவாரி மாமூல் வசூல் நடவடிக்கை கோரி வழக்கு
மதுரை: சிவகங்கை மாவட்டம் குவாரி உரிமையாளர்களிடம் மாமூல் வசூலை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில் கலெக்டரிடம் அரசு வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. பெரியகிளுவச்சி கந்தசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: கிராவல் குவாரி உரிமம் பெற்றவர்கள், குவாரியிலிருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களிடம் ஒரு லோடுக்கு ரூ.9000 வசூலிக்கின்றனர். அதில் ரூ.1500 ஐ ஒரு தொழிலதிபருக்கு மாமூலாக கொடுக்க வேண்டும். குவாரி உரிமையாளர் கனிமவளத்துறைக்கு ரூ.750 மட்டுமே செலுத்துகிறார். அத்தொழிலதிபருக்கு சட்டவிரோதமாக பணம் வசூலித்து கொடுக்க பலர் உள்ளனர். கலெக்டரிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.கண்ணன் ஆஜரானார். நீதிபதிகள்,'கலெக்டரிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் ஆக.,26 ல் தெரிவிக்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.