உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் தீவனத்தட்டுப்பாடு கால்நடைகள் வளர்ப்போர் கவலை

பேரையூரில் தீவனத்தட்டுப்பாடு கால்நடைகள் வளர்ப்போர் கவலை

பேரையூர்: பேரையூரில் போதிய மழையில்லாததால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பேரையூர் தாலுகா வானம் பார்த்த பூமி. இங்கு மானாவாரி நிலங்கள் அதிகம். இந்த நிலங்களில் ஆனி, ஆடி மாதங்களில் மழை பெய்தால் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டுவர். இந்தாண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்த விதை, போதிய மழை இன்றி முளைக்கவில்லை. கால்நடைகளால் ஓரளவு வருமானம் ஈட்டி வந்த விவசாயிகள் தற்போது தீவன பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். அனைத்து பகுதிகளிலும் புல்வெளிகள், செடிகொடிகள் இன்றி காய்ந்து விட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் காய்ந்த சருகுகளை மட்டுமே தீவனம் ஆக்குகின்றன. குளங்கள், கண்மாய் உட்பட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு கிடப்பதால் குடிநீரின்றி தவிக்கும் நிலை உள்ளது. ஆடு வளர்க்கும் ஈஸ்வரன் கூறியதாவது: நுாற்றைம்பது ஆடுகளை வளர்க்கிறேன். வறட்சியால் கால்நடைகளை பராமரிக்க முடியவில்லை. தண்ணீர் தேடி நெடுந்துாரம் அலைந்தாலும் பயனில்லை. இத்தனை ஆடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இந்நிலைத் தொடர்ந்தால் கால்நடைகளை விற்பதை தவிர வேறு வழியில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ