உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுக்கு சங்கர் ஜாமின் நிபந்தனை தளர்வு; உயர்நீதிமன்றம் உத்தரவு

சவுக்கு சங்கர் ஜாமின் நிபந்தனை தளர்வு; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை; சவுக்கு சங்கருக்கு எதிராக தேனி, திருச்சி, கரூர் போலீசில் பதிவான வழக்குகளில் ஜாமின் நிபந்தனையை தளர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து யூடியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்தனர். கைதான அவருக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை அதே போலீசில் ஆஜராக நிபந்தனை விதித்தது.தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட சிலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை பழனிசெட்டிபட்டி போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்தது.சவுக்கு சங்கருக்கு எதிராக பண மோசடி வழக்கு கரூர் டவுன் போலீசில் பதிவானது. இவ்வழக்கில் ஜாமின் அனுமதித்து சனிக்கிழமைதோறும் போலீசில் ஆஜராக கரூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.ஏற்கனவே சவுக்கு சங்கர், 'வெவ்வேறு வழக்குகளில் சென்னை போலீசில் ஆஜராகி கையெழுத்திடுகிறேன். ஒரே நேரத்தில் அனைத்து வழக்குகளிலும் ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் வெவ்வேறு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வாய்ப்பில்லை. மதுரை, திருச்சி, கரூர் நீதிமன்றங்கள் விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னையில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.அக்.21 ல் தனிநீதிபதி: கீழமை நீதிமன்ற நிபந்தனைகள் மாற்றியமைக்கப்படுகிறது. மனுதாரர் சென்னை சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். இந்நிபந்தனையை தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் மனு செய்தார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்: நிபந்தனை தளர்த்தப்படுகிறது. போலீசாரின் விசாரணைக்கு தேவையானபோது மனுதாரர் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை