சிகிச்சையில் இருந்த ஆதீனத்திடம் சென்னை போலீஸ் தீவிர விசாரணை 32 கேள்விகளுக்கு பதிலளித்தார்
மதுரை: மதுரையில், அறுவை சிகிச்சை காரணமாக, படுக்கையில் ஓய்வு எடுத்து வரும் மதுரை ஆதீனத்திடம், சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று விசாரித்தனர்.துறவிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மதுரை ஆதீனம் காரில் சென்னை சென்றபோது, உளுந்துார்பேட்டை அருகில் அவரது காரை மோத வருவது போல மற்றொரு கார் சென்று விபத்து ஏற்பட்டது.அந்த காரில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் இருந்ததாக ஆதீனம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் அதை மறுத்தனர். மேலும், மத ரீதியான பிரச்னையை ஆதீனம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என, சென்னை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் எதிரொலியாக, கைது நடவடிக்கையை தவிர்க்க, மதுரை ஆதீனம் சென்னை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.இந்நிலையில், குடலிறக்க பாதிப்புக்கு அறுவை சிகிச்சை முடித்து, மதுரையில் மருத்துவ ஓய்வில் உள்ள ஆதீனத்திடம், நேற்று சென்னை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையிலான போலீசார் வழக்கு தொடர்பாக விசாரித்தனர்.அதுகுறித்த ஆவணங்களை எடுத்துக் கொடுக்க, மடத்தின் உதவியாளரை உடன் வைத்துக்கொள்ள ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார். அவரது உடல்நலம் கருதி விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் உடன் இருக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கு போலீசார் மறுத்து விட்டனர்.இதையடுத்து, போலீஸ் - வழக்கறிஞர்களிடையே நடந்த பேச்சில், துன்புறுத்தும் வகையிலும், கண்டிப்பான முறையிலும் கேள்விகள் கேட்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆதீனத்திடம் ஒரு மணிநேரம் விசாரணை நடந்தது. மொத்தம், 32 கேள்விகளுக்கு படுக்கையில் இருந்தவாறே ஆதீனம் பதிலளித்தார். விசாரணையின் போது, விளக்குத்துாண் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் மடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.