மாநகராட்சி சார்பில் சிறப்பு குழந்தைக்கான பயிற்சி மையம் கமிஷனர் சித்ரா தகவல்
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு பிரத்யேக கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கும் வகையில் மையம் துவக்கப்படவுள்ளது என கமிஷனர் சித்ரா தெரிவித்தார். மாநகராட்சியில் உள்ள 64 பள்ளிகளில் 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் செரிபல் பால்சி, ஆட்டிஸம், கற்றல் குறைபாடு, பார்வை, கேட்கும் திறன், பேச்சு குறைபாடுகள் உள்ள 330 சிறப்பு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு பள்ளி சிறப்பு பயிற்றுனர்கள் கற்பித்தல் பயிற்சி அளிக்கின்றனர். ஆனால் மாநகராட்சி மாணவர்களுக்கு இப்பயிற்சி போதுமானதாக இல்லை என கமிஷனர் சித்ரா கவனத்திற்கு தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சிகளில் முதல்முறையாக மதுரையில் சிறப்பு பயிற்சி மையம் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் கூறியதாவது: சிறப்பு குழந்தைகளுக்கான கற்பித்தல் என்பது அவர்களின் நிறை குறைகளை மருத்துவ உதவியுடன் கண்டறிந்து அவர்கள் அறிவுத்திறனுக்கு ஏற்ப கற்பித்தல் அளிக்க வேண்டியுள்ளது. இவ்வகை மாணவர்கள் நலனுக்காக மாநகராட்சி சார்பிலேயே சிறப்பு மையம் துவக்கப்படவுள்ளது. அங்கு ஸ்பீச் தெரபிஸ்ட், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், 2 சிறப்பு கல்வி பயிற்றுநர்கள் உள்பட 7 பேர் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே இடத்திற்கு அழைத்து வந்து அனைத்துவகை கற்பித்தல் பயிற்சியும் அளிக்கும் வகையில் அதிக மாணவர்கள் படிக்கும் மறைமலை அடிகளார் மாநகராட்சி பள்ளியில் விரைவில் மையம் துவக்கப்படும் என்றார்.