வீட்டு மனையாகும் விளை நிலங்களால் சாகுபடி பாதிப்பு
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் விவசாய நிலங்களை பலரும் பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்வதால் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. பேரையூர் தாலுகாவில் கிணற்று பாசனங்களால் மழையை எதிர்நோக்கும் மானாவாரி நிலங்களிலும் விவசாயம் நடக்கிறது. தாலுகாவில் பேரையூர், மோதகம், டி. கல்லுப்பட்டி பிர்காவில் உள்ள கிராமங்கள் பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும், அத்திபட்டி, ஏழுமலை சேடப்பட்டி ஆகிய மூன்று பிர்கா கிராமங்கள் ஏழுமலை சார் பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரப்பதிவை மேற்கொள்கின்றன. தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை வசதி அதிகரிக்க அதிகரிக்க சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களின் மதிப்பு உயர்ந்து வருகிறது. டி.கல்லுப்பட்டி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலம் சந்தை மதிப்பில் ரூ.ஒரு லட்சத்திற்கு விற்பனையானது. இதே இடம் தற்போது ஒரு ஏக்கர் ரூ.ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகிறது. இதனால் இப்பகுதியில் ரோட்டை ஒட்டியுள்ள விளைநிலங்கள் வேக வேகமாக பிளாட்டுகளாக மாறி வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்தி ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மிகவும் 'பிஸி'யாகிவிட்டனர். அவர்கள் விவசாய நிலங்களை வாங்கி பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். விவசாய நிலங்களை ஐந்தாண்டுகள் சாகுபடி செய்யாமல் தரிசாக வைத்து இருந்தால் அதனை வீட்டுமனைகளாக மாற்றம் செய்யலாம் என்ற விதி உள்ளது. இவர்கள் வருவாய்த் துறையினரை சரிக்கட்டி விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதற்காக நிலத்தில் முதலீடு செய்பவர்களை குறி வைத்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் செயல்படுகின்றனர். இதனால் இப்பகுதியில் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதன்மூலம் விவசாய தொழிலே கேள்விக்குறியாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்காவிடில் விவசாயம் கேள்விக்குறியாக மாறிவிடும்.