உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்சாரம் தாக்கி பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானதில், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருப்பாச்சேத்தி அருகே துாதையை சேர்ந்த அழகம்மாள் தாக்கல் செய்த மனு: எனது கணவர் பெருமாள். விவசாயி. அவர் 2023 பிப்.,3 ல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றபோது ஒரு மின் ஒயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி இறந்தார். திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர். இழப்பீடு, எனது இளைய மகள் ஜெயசித்ராவிற்கு வேலை வழங்க கலெக்டர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், உதவி பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மணிபாரதி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்தவர் தவறு செய்யவில்லை என்பதாகத் தோன்றுகிறது. மின் விபத்தால் மரணம் ஏற்பட்டால் கருணைத் தொகை வழங்குவது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை மின்வாரியம் 2024 ல் வெளியிடுவதற்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் இருந்ததால் மின்வாரியத்தின் அந்த உத்தரவை பயன்படுத்துகிறேன். மனுதாரருக்கு ரூ.6 லட்சம், மகள்களுக்கு தலா ரூ.2 லட்சத்தை கண்காணிப்பு பொறியாளர் வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு உரிமை உள்ளது. இவ்வாறு உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை