மதுரையில் மெமு ரயில் பணிமனை அமைக்க வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் 'மெமு' ரயில்களுக்கான பணிமனை அமைக்க, ராஜபாளையம் ரயில் பய னாளர் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. இக்கூட்டம் தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜெகந்நாத ராஜா வரவேற்றார். உறுப்பினர்களின் கருத்துகள், பயணியர் தேவைகள், எதிர்கால சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மதுரை கூடல்நகரில் மெமு ரயில்களுக்கான பணிமனை, மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள், காலை 7:25க்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை ரயிலை மைசூரு - துாத்துக்குடி ரயிலுக்கு இணைப்பாக இயக்க வேண்டும். ராஜபாளையம் வழியாக பெங்களூருவிற்கு தினசரி இரவு நேர ரயில், மதுரை - ராஜபாளையம் - மதுரை இடையே அதிகாலை, இரவில் கூடுதல் ரயில், செங்கோட்டையில் பிட் லைன் அமைத்தல், சிலம்பு ரயிலை தினசரி இயக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் ஹரிசங்கர் நன்றி கூறினார். பொருளாளர் ஜெகத் சங்கர், ஆடிட்டர் அப்துல் நாசர், செயலாளர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.