பழமையான பள்ளி கட்டடம் அகற்றம்: புது கட்டடம் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: கரூரில் பழமையான நகராட்சி பள்ளி கட்டடத்தை பாதுகாக்க தாக்கலான வழக்கில் பாழடைந்த பகுதி அகற்றப்பட்டு, புது கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. கரூர் வழக்கறிஞர் நன்மாறன் 2020 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூரில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி 1909 ல் கட்டப்பட்டது. இங்கு படித்தவர்கள் நீதிபதிகள், கல்வியாளர்கள், அமைச்சர்களாகியுள்ளனர். இப்பாரம்பரியமிக்க பழமையான பள்ளி கட்டடத்தை பாதுகாக்காமல், கரூர் மாநகராட்சி நிர்வாகம் இடிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க நகராட்சி நிர்வாக செயலர், கரூர் கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணி: 1909ல் கட்டப்பட்ட கட்டடத்தின் பாழடைந்த பகுதி இடிக்கப்பட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புது கட்டடம் கட்டப்பட்டது. 2021 முதல் புது கட்டடத்தில் பள்ளி செயல்படுகிறது என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குழந்தைகளின் பாதுகாப்பை கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அதில் எவ்வித குறைபாட்டையும் இந்நீதிமன்றம் காணவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.