குன்றத்து கோயிலில் திருமணப் பதிவுக்கு மறுப்பு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 7, 8 ல் திருமணப் பதிவுகளுக்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பரங்குன்றத்தில் நவ. 7 ல் சூரசம்ஹாரம், நவ. 8 ல் சட்டத்தேர், பாவாடை தரிசனம் நடக்கிறது. இவ்விரு நாட்களும் சுபமுகூர்த்த நாட்கள். பக்தர்கள் கூட்டத்தை காரணம் காட்டி இந்நாட்களில் திருமண நிகழ்ச்சிகள் நடத்தவும், பதிவு செய்யவும் கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இயக்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கூறியதாவது:கோயிலில் திருமணம் செய்வதை பக்தர்கள் வேண்டுதலாக கொண்டுள்ளனர். இவ்வேண்டுதலை ஆயுளில் ஒருமுறையே பக்தர்கள் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை கோயில் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்காமல் கோயில் நிர்வாகம் அலட்சியத்துடன் உத்தரவுகள் பிறப்பிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.பக்தர்களின் உணர்வுகளுக்கு விரோதமான இதுபோன்ற நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது. இவ்விஷயத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கலெக்டர் சங்கீதா ஆகியோர் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தகுந்த முன்னேற்பாடுகளுடன் பக்தர்கள் திருமணம் செய்துகொள்ள, பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.