உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கலைத் திருவிழாக்கள் நடத்தியும் அரசு பள்ளிகளுக்கு கலை நிதி கிடைக்கல: போட்டிக்கு ஒதுக்கிய நிதியை இழுத்தடிப்பதாக புகார்

கலைத் திருவிழாக்கள் நடத்தியும் அரசு பள்ளிகளுக்கு கலை நிதி கிடைக்கல: போட்டிக்கு ஒதுக்கிய நிதியை இழுத்தடிப்பதாக புகார்

மதுரை: மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தியதற்கான செலவுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் சார்பில் ஆண்டுதோறும் 6 - 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 'கலைத் திருவிழா' என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பள்ளி, ஒன்றியம், மாவட்ட, மாநில அளவில் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு தமிழக அரசு சார்பில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் நடைமுறையும் உள்ளது. இந்தாண்டு மாநிலப் போட்டிகள் முடிந்து வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மதுரையில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளுக்கான நிதி இன்னும் பள்ளிகளுக்கு விடுவிக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்டத்தில் பள்ளிகள், ஒன்றியம், மாவட்டம் என ஒவ்வொரு நிலைகளிலும் இப்போட்டிகள் நடந்தன. மாணவர்கள் பங்கேற்பது, பயணச் செலவு, போட்டிக்கான ஏற்பாடுகளுக்காக அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது, போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவுத் தொகை என்ற பெயரில் பள்ளிகளுக்கு வழங்கப்படும். ஆனால் போட்டிகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சேர்ந்து தங்கள் சொந்தப் பணத்தை செலவிட்டு நடத்தினர். அதற்கான செலவுத் தொகையை பள்ளிகளுக்கு விடுவித்தவுடன் பெற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தற்போது மாநில போட்டிகள் முடிந்த நிலையிலும் இன்னும் மாவட்ட அளவில் முடிந்த போட்டிகளுக்கான செலவுத் தொகை பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சி.இ.ஓ., தயாளன் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை