உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனையில் டெக்ஸா ஸ்கேன்: உங்க எலும்பில் அடர்த்தியிருக்கா... கண்டறியலாம்

மதுரை அரசு மருத்துவமனையில் டெக்ஸா ஸ்கேன்: உங்க எலும்பில் அடர்த்தியிருக்கா... கண்டறியலாம்

எலும்பின் அடர்த்தியை கண்டறிய முன்பு சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது 'டெக்ஸா ஸ்கேன்' கருவியின் மூலம் குறைந்த கதிரியக்கத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்யலாம். எக்ஸ்ரே கதிரியக்கத்தை விட இந்த ஸ்கேனில் கதிரியக்கம் குறைவு. வெளிநாடுகளில் மட்டுமின்றி மத்திய அரசு நிறுவன மருத்துவமனைகளிலும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையிலும் 'டெக்ஸா ஸ்கேன்' கருவி உள்ளது. இதன் விலை ரூ.50 லட்சம். நோயாளியை படுக்கவைத்து இடுப்பெலும்பு, முதுகெலும்பு பரிசோதனையை 5 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்ய முடியும். இந்த கருவி மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையின் சார்பில் வாங்கப்பட உள்ளது.டாக்டர்கள் கூறியதாவது: முதுகெலும்பின் (ஆஸ்டியோபோராசிஸ்) அடர்த்தியை கண்டறிய இந்த கருவி உதவுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முதுகெலும்பு, இடுப்பெலும்பு தேய்மானம் ஏற்படும். இது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய். சரியான நேரத்தில் தேய்மானத்தை கண்டறிந்தால் நவீன மருந்துகளின் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். மேலும் வயதின் தன்மைக்கேற்ப எலும்பின் அடர்த்தி இழப்பை கண்டறிய முடியும். மரபணு ரீதியாக பெற்றோர்களுக்கு ஏற்கனவே 'ஆஸ்டியோபோராசிஸ்' நோய் இருந்தாலும் அவர்களின் இளம் தலைமுறையினருக்கு எலும்பின் அடர்த்தியை கண்டறிவது அவசியம். இல்லாவிட்டால் திடீரென எலும்பு முறிவு ஏற்படும் போது பாதிப்பு அதிகமாகும். 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் இந்த பரிசோதனை செய்யலாம். மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த கருவி வைப்பதற்கான கூடுதலான அறை கட்டப்பட்டு வருகிறது. மேலும் இடுப்பு, வயிறு, தொடை, தோள்பட்டை பகுதியில் உள்ள கொழுப்பின் அடர்த்தியையும் இந்த பரிசோதனையில் கண்டறியலாம்.'பேரியாடிக்' எனப்படும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் இந்த பரிசோதனை முடிவுகள் உதவும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை