சீமான் மீது டி.ஐ.ஜி., அவதுாறு வழக்கு: உயர்நீதிமன்றம் தடை உயர்நீதிமன்றம் தடை
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.திருச்சி டி.ஐ.ஜி.,வருண்குமார். அவர் மற்றும் குடும்பத்தினர் பற்றி சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் அவதுாறாக கருத்து பதிவிட்டனர்.அவதுாறாக கருத்து வெளியிட்டதாக சீமான் மீது திருச்சி (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் அந்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது.அதை ரத்து செய்து வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எல்.விக்டோரியாகவுரி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராமமூர்த்தி ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு: திருச்சி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வருண்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.