தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தி.மு.க.,வின் பி டீம் * துரோகிகள் அடையாளம் காணப்பட்டதாக மதுரையில் பழனிசாமி பேட்டி
திருமங்கலம்: ''தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தி.மு.க.,வின் 'பி' டீமாக செயல்படுகிறார்கள். துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள். எனவே களைகள் அகற்றப்பட்டு அ.தி.மு.க., செழித்து வளரும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். மதுரை கப்பலுாரில் அவர் கூறியதாவது: நான் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாகவும், தினமும் பொய்யான அறிக்கையை வெளியிட்டு வருவதாகவும், அவதுாறு கருத்துகளை கூறி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் நெற்பயிர்கள் கொள்முதல் செய்யப்படாததால், முளைத்துவிட்டன. இதனை சட்டசபையில் அக்.17ல் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கொண்டுவந்தேன். அக்.,21ல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தேன். அங்கு கொண்டு வரப்பட்ட நெல் மூடைகள் 15 நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் இருந்தது. நாளொன்றுக்கு 600 மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதை எடுத்துக் கூறினால் அவதுாறு பரப்புவதாக முதல்வர் கூறுகிறார். பொய் கூறும் முதல்வர் உணவு மானியக் கோரிக்கையின்போது, கொள்கை விளக்க குறிப்பில் 2022--23ம் ஆண்டு 29.48 லட்சம் டன், 2023--24-ம் ஆண்டு 29.46 லட்சம் டன், 2024--25ம் -ஆண்டு 28.26 லட்சம் டன், 2025-- 26-ம் ஆண்டு 28.30 லட்சம் என மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரம் டன் நெல் மட்டுமே தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் 42.5 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளதாக முதல்வர் பொய்யான தகவலை கூறி வருகிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க அ.தி.மு.க., ஆட்சியில் தேசிய பருவநிலை தழுவல் நிதிமுலம் ரூ.165.68 கோடி செலவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் சதுப்பு நிலத்தின் அருகில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் இறந்தவர்கள், மாறுதலாகி வேறு இடம் சென்றவர்கள் உள்ளிட்டோர் வாக்குகள் நீக்கப்படவேண்டும். ஆர்.கே. நகரில் 31 ஆயிரம் வாக்குகள், கரூரில் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன. கரூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிக்கப்பட்ட பின்னரும், அங்கு வாக்காளர்கள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே இறந்தவர்கள் பட்டியல், குறிப்பிட்ட பகுதியில் வசிக்காதவர்கள் பட்டியல் எடுத்து முறையாக ஆய்வு செய்து தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. மூவரும் போட்ட திட்டம் 2026- தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றிபெறும் என்ற பயத்தில், வாக்காளர் திருத்தப்பணி மேற்கொள்ளக்கூடாது என தி.மு.க., எதிர்க்கிறது. வரும் தேர்தலில் துரோகம் வீழ்த்தப்படும் என செங்கோட்டையன், தினகரன், பன்னீர்செல்வம் ஒன்று சேர்ந்து பேசியது, ஏற்கனவே அவர்கள் போட்ட திட்டம்தான். இப்படிப்பட்டவர்களின் துரோகத்தால்தான் கடந்த முறை அ.தி.மு.க., வீழ்த்தப்பட்டது. செங்கோட்டையன் குழி பறித்ததால்தான் அந்த தொகுதியில் அ.தி.மு.க., ஜெயிக்க முடியவில்லை. மூவரும் ஒன்றிணைவதால் அ.தி.மு.க.,வுக்கு எந்த பலவீனமும் இல்லை. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. மூவரும் ஒன்றிணைந்து பேசியது எதற்கும் உதவாது. அவர்களைப் பற்றி பேசுவது வீணானது. தி.மு.க.,வின் 'பி' டீமாக செயல்படுகிறார்கள். துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள். எனவே களைகள் அகற்றப்பட்டு அ.தி.மு.க., செழித்து வளரும் இவ்வாறு கூறினார்.
விருந்தினராக வந்த த.வெ.க.,
பழனிசாமி கூறுகையில், ''அ.தி.மு.க., தலைமையில் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர்களும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அ.தி.மு.க., கூட்டத்தில் த.வெ.க., தொண்டர்கள் கொடியை காட்டியதற்காக, தொண்டர்கள் பிள்ளையார் சுழி போட்டதாக சொன்னேன். எங்கள் கட்சி கூட்டத்திற்கு விருந்தாளி போல வந்தவர்கள் த.வெ.க., தொண்டர்கள். அவர்களை வேண்டாம் எனச்சொல்ல முடியுமா'' என்றார். ....
தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய பழனிசாமி
பழனிசாமி கூறுகையில், ''திருச்சியில் நெல் தேங்கிக் கிடப்பது குறித்து தினமலர் பத்திரிகையில் (அப்போது நம் நாளிதழில் வெளியான செய்தியை காட்டினார்) வெளிவந்துள்ளது. விவசாயிகள் விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்ய முடியாத முதல்வர் தான் விமர்சனம் செய்கிறார். நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது'' என்றார்.