உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள்; தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது பொது சுகாதார இயக்குநர் தகவல்

கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள்; தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது பொது சுகாதார இயக்குநர் தகவல்

மதுரை,: மதுரையில் எய்ம்ஸ் சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கில், 'தமிழகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக' பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கான மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் (வி.சி.ஆர்.சி.,), கிளினிக்கல் மைக்ரோபயாலஜி சங்கம், மதுரை எய்ம்ஸ் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தன.செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் பேசுகையில், ''மதுரை எய்ம்ஸ் சார்பில் இரண்டு சர்வதேச பல்கலை ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம்'' என்றார்.வி.சி.ஆர்.சி. மூத்த விஞ்ஞானி பரமசிவம் பேசுகையில், ''தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தில் எந்த இடத்தில் வைரஸ் பரப்பும் கொசுக்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து நோய் வருமுன்பாகவே அதற்கான காரணியை தடுக்கமுடியும்'' என்றார்.மதுரை எய்ம்ஸ் செயலாளர் மங்கையர்க்கரசி பேசுகையில்,'' மதுரை எய்ம்ஸ் சார்பில் தமிழக அரசின் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மைக்ரோ பயாலஜி துறையுடன் இணைந்து செயல்படுகிறோம்'' என்றார்.பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் பேசியதாவது: தற்போது எந்த பகுதியில் எந்த நோய் பரவுகிறது என்பதையும் மனிதர்களுக்கு நோய்கள் பரவுவதற்கு முன்பாகவே அவற்றின் தன்மையை கண்காணிக்கிறோம். தமிழகத்தில் 33 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை.கொசுக்கள் மூலம் பரவும் நோய்களில் டெங்கு முக்கியமானது. தமிழக மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது குறைந்தளவு தான் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.மக்களும் இதுகுறித்த விழிப்புணர்வு பெறவேண்டும். கொசுக்கள் பறக்கும் அதிகபட்ச துாரமே 500 மீட்டர் தான். பெரும்பாலான நேரங்களில் டெங்கு கொசு உருவாவதற்கு மக்கள் தான் காரணமாக உள்ளனர். அதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் சுகாதாரத்துறை உள்ளது. எந்த காய்ச்சலாக இருந்தாலும் சுயபரிசோதனை செய்யாமல் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்பது தான் வேண்டுகோள்.தமிழகத்தில் கொரோனா தொற்றின் போது 'கோவிட் வைரஸ்' கண்டறிவதற்கான 'ஆர்.டி.பி.சி.ஆர்.' பரிசோதனை கருவிகள், அதற்கான கட்டமைப்பை பெரியளவில் உருவாக்கியிருந்தோம். தற்போது அதற்கான பணிகள் முடிந்த நிலையில் அந்த கருவிகளையும் கட்டமைப்பையும் வேறு நோய்கள், வைரஸ்களை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியில் உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ