உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சிக்கு எதிரான துாய்மைப் பணியாளர்கள் போராட்டம்; தி.மு.க., நகர் செயலாளர் ஆதரவு

மதுரை மாநகராட்சிக்கு எதிரான துாய்மைப் பணியாளர்கள் போராட்டம்; தி.மு.க., நகர் செயலாளர் ஆதரவு

மதுரை : மதுரையில் மாநகராட்சியை கண்டித்து துாய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு தி.மு.க., நகர் மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் நிர்வாகிகள் ஆதரவு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் துாய்மை பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அவர் லேண்ட்' என்ற தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் பணி நீக்கம் செய்யும், துாய்மை பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவதால் அந்நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர் சங்கம், துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்கம், துாய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் மாநகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி வளாகத்தில் முகாமிட்டு சமையல் செய்து சாப்பிட்டு, இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டத்தை நடத்தினர். கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இதற்கிடையே தி.மு.க., நகர் செயலாளர் தளபதி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டோரை சந்தித்து ஆதரவு தெரிவித்து அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் தடுப்பையும் மீறி மாநகாட்சி மைய அலுவலகத்திற்குள் நுழைந்தனர். கமிஷனர் அலுவலகம் முன் (கமிஷனர் அங்கு இல்லை) தரையில் அமர்ந்தனர். முன்னெச்சரிக்கையாக கமிஷனர் அலுவலகம் முன் கதவுகளை போலீசார் மூடினர். அவர்களிடம் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.போராட்டம் தீவிரம் அடையும் நிலையில், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், மாநகராட்சி துணை கமிஷனர் ஜெய்னுலாவுதீன் உள்ளிட்டோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். அதில் 'தனியார் நிறுவன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது, ஒருமுறை தான் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கை ஏற்கபட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், மாநகராட்சி வரிமுறைகேடு தொடர்பாக நேர்மையாக விசாரிக்க கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்கிறார். இதனால் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க., பிரமுகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கமிஷனரை கண்டித்து நடந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்க தி.மு.க.,வினர் முயற்சித்தனர். ஆனால் துாய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்திற்கு கமிஷனர் சித்ரா சாமர்த்தியமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !