திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் உதயகுமாருக்கு எதிர்ப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்
திருமங்கலம்: 'திருமங்கலம் நகராட்சிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் உதயகுமார் செய்தது என்னவென்று' தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.திருமங்கலம் நகராட்சிக் கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் பாண்டி பேசுகையில், 'செங்குளத்தில் ஒருமாதத்திற்கும் மேலாக விளக்கு எரியவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மின்பிரிவு அதிகாரிகளை கேட்டால் முறையாக பதில் சொல்வது இல்லை' என்றார். பதிலளித்த நகராட்சி பொறியாளர் ரத்தினவேலு, 'விரைவில் தீர்வு காணப்படும்' என்றார்.உசிலம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் மகாலில் அனுமதி பெற்றதை விட கூடுதலாக கட்டடம் கட்டியுள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர் சின்னச்சாமி கூறினார். 'நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.துணைத் தலைவர் ஆதவன் பேசுகையில், 'திருமங்கலத்தில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் 20க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. கட்டுப்படுத்த அதிகாரிகள் முழு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். கமிஷனர் அசோக் குமார் பதிலளிக்கையில், 'ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரூ. 67 லட்சம் ஒதுக்கி முழு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அ.தி.மு.க., கவுன்சிலர் போதுராஜா பேசுகையில், 'திருமங்கலத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் பேசினார். நகராட்சி அதற்கு என்ன செய்யப் போகிறது' என்றார். இதனால் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார் ஆவேசமடைந்தனர்.'பத்தாண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. இதில் உதயகுமார் ஐந்து ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தார். அப்போது அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். கப்பலுார் டோல்கேட்டை அகற்ற என்ன செய்தார். எம்.எல்.ஏ., நிதியில் நகராட்சி பகுதிக்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. முதலில் அவரிடம் போய் கேள்வி கேளுங்கள். அதன் பின் நகராட்சி கூட்டத்தில் பதில் சொல்கிறோம் என வாக்குவாதம் செய்தனர்.