தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தால் அடுத்த 10 ஆண்டுக்கு அ.தி.மு.க., ஆட்சி செல்லுார் ராஜூ சென்டிமென்ட்
மதுரை: ''மதுரையில் பொதுக்குழு நடத்தியதன் மூலம் தி.மு.க., தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டது. இனி 10 ஆண்டுகளுக்கு அவர்களால் ஆட்சிக்கு வரமுடியாது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: மதுரையின் 10 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அமைச்சர் மூர்த்தி சொல்லலாம். ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே. முதல்வரின் 'ரோடு ஷோ'விற்கு செயற்கையாக கூட்டத்தை கூட்டினர். பந்தல்குடி கால்வாயை துணியால் மறைத்ததை சுட்டிக்காட்டியதற்கு தி.மு.க.,வினர் என்னை விமர்சித்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பந்தல்குடி கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுத்தோம். ஆட்சி மாற்றத்துக்கு பின்பு அத்திட்டம் நிறுத்தப்பட்டது.மதுரையில் தி.மு.க., பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுதோ, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. 1977ல் மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவுக்கு பின்பு 12 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி தான். இதனால்தான் மதுரைக்காரர்கள் என்றாலே தி.மு.க., தலைமைக்கு பிடிக்காது.மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க., இனி 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. பழனிசாமியை திட்டி ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார்.திட்ட, திட்ட நாங்க திண்டுக்கல்லுப்பா; எங்க பொதுச் செயலாளர் அவ்வளவு பவர்புல்பா.இவ்வாறு கூறினார்.