தி.மு.க., அரசு மாறவில்லை விஜய்க்கு கிருஷ்ணசாமி ஆதரவு
மதுரை : 'கரூர் சம்பவத்திலும் 1999ல் நடந்த மாஞ்சோலை சம்பவத்திலும் தி.மு.க., அரசின் அணுகுமுறை மாறவில்லை. விஜய் விவகாரத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைக்கக்கூடாது' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது: கரூர் சம்பவத்தையும், 1999ல் 17 பேர் இறந்த மாஞ்சோலை சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடியால் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் மூழ்கி இறந்தனர். அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார். 26 ஆண்டுகளுக்கு பின் இதுபோன்ற சம்பவத்தை கரூரில் அரங்கேற்றியுள்ளனர். இவ்விவகாரத்தில் சில கட்சித்தலைவர்கள் விஜய் மீதான வன்மத்தை தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாக கருத்து தெரிவிக்கின்றனர். விஜய் கட்சி அமைப்பாளர்கள் அனுபவமற்றவர்கள். வியூக அமைப்பாளர்கள் களநிலவரம் அறியாத புதியவர்கள். விஜய் இவர்களை வைத்தே கட்சியை நகர்த்த வேண்டியுள்ளது. விஜய் தனது பிரசாரத்தில் ஆளுங்கட்சி பிரமுகர் உட்பட ஆட்சியாளர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆளுங்கட்சிக்கு வேண்டாமா. ஒருதலைபட்சமாக இருக்கக்கூடாது. நல்லதும், கெட்டதும் ஒரு புள்ளியில்தான் துவங்கும். அந்த புள்ளி விஜய் கரூரில் பேச அனுமதித்த குறுகலான இடம்தான். ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைத்து புனிதப்படுத்த முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.