உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரத்தசோகை, மாதவிடாய் பிரச்னையை ‛தள்ளிப்போடாதீங்க: குழந்தைப்பேறு தாமதமாகும் ஆபத்து

ரத்தசோகை, மாதவிடாய் பிரச்னையை ‛தள்ளிப்போடாதீங்க: குழந்தைப்பேறு தாமதமாகும் ஆபத்து

மதுரை: திருமணத்திற்கு முன்பே ரத்தசோகை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் பின்னாளில் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அபாயத்தை இளம்பெண்கள் தவிர்க்கலாம்.தமிழகத்தில் 25 முதல் 30 சதவீத இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் மாதம் 300 பேர் குழந்தைப் பேறின்மையால் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கு வருகின்றனர். திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை முறையை மாற்றினால் கருத்தரிப்பு நிகழ்வில் பிரச்னையிருக்காது என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு மருத்துவர் நாகராணி நாச்சியார்.அவர் கூறியதாவது:பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை அதிகரிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிறது. சிலருக்கு 16 வயதிலும் சிலருக்கு 2 குழந்தைகள் பெற்ற பிறகும் நீர்க்கட்டி பிரச்னை ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பாகவும் திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் வரும் நீர்க்கட்டிகளையோ, ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை கூடுவதையோ பெண்கள் கண்டுகொள்வதில்லை. திருமணமாகி குழந்தைப்பேறு தள்ளிப்போகிறது என்றவுடன் சிகிச்சைக்கு வருகின்றனர். எதனால் நீர்க்கட்டிகள் வருகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுப்பதோடு வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.உடலுழைப்பு குறைவு, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்றவை நீர்க்கட்டி உருவாவதற்கு முக்கிய காரணங்கள். திருமணத்திற்கு முன் ‛டீன் ஏஜ்' வயதில் மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் ரத்தசோகை உள்ளதா என கண்டறிய வேண்டும். சரிவிகித உணவுகளை சாப்பிடுவதை பெற்றோர் பழக்க வேண்டும். கீரை சாப்பிட விரும்பாவிட்டால் அதை சூப் போல தரலாம்.ஒரு மாதம்தான் மாதவிடாய் வரவில்லை, தட்பவெப்பநிலையால் பிரச்னை, தேர்வுக்கு படிப்பதால் பயத்தால் தள்ளிப்போகிறது என நாமே ஒரு காரணத்தை கண்டுபிடிக்கக்கூடாது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் பெண்களிடம் குறைந்துள்ளது. விளையாட்டுகளிலும் பங்கேற்பது மிகவும் குறைவு. இரவில் தாமதமாக துாங்குவது, காலையில் தாமதமாக எழுந்திருப்பது போன்ற எல்லாமே பிரச்னைக்கு காரணமாகிவிடும்.உடல் எடைக்கேற்ற புரோட்டீன் அளவை சாப்பிடுவதையும் பழக்கப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக யோகா பயிற்சி செய்யலாம். இதற்கு இடவசதியும் தேவையில்லை. யோகா பயிற்சியை பழகும் போது உணவு, பிற பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியும். திருமணத்திற்கு முன் முகத்தை அழகுபடுத்துவதை போல உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். இதுபோன்ற விஷயங்களை பின்பற்றினால் திருமணத்திற்கு பிறகு கருத்தரிப்பு பிரச்னை குறையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை