பள்ளம் கண்டு பாயுது வைகை தண்ணீர் பாலத்தின் கீழே குப்பை தேங்குவதால்
மதுரை : மதுரை யானைக்கல் பகுதியில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் செல்லும் குழாய் சிறியதாக இருப்பதாலும், அருகே சர்வீஸ் ரோடு பள்ளமாக இருப்பதாலும் ஆற்றுநீர் சர்வீஸ் ரோட்டில் பாய்ந்து போக்குவரத்தை சிரமப்படுத்துகிறது.வைகை ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய யானைக்கல் தரைப்பாலம் தற்போது வாகன பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், காட்சிப்பொருளாக உள்ளது. பாதசாரிகள் அவ்வப்போது இந்த பாலத்தை பயன்படுத்தி தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு செல்கின்றனர். பாலத்தின் கீழ்ப்பகுதியில் 3 அடி விட்டத்தில் ஆற்றுத்தண்ணீர் செல்லும் வகையில் சிறிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மாநகராட்சி குடியிருப்புகளின் கழிவுநீர் நிரந்தரமாக சேர்வதால் ஆகாயத்தாமரை செழித்து வளர்கின்றன. அவ்வப்போது அவை அகற்றப்பட்டாலும் செடிகள் வளர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் செடிகள் குழாய்களை சுற்றிலும் படர்ந்து அடைத்துள்ளதால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும்போது குழாய்கள் வழியே தண்ணீர் செல்ல முடியாமல், ஆற்றை விட பள்ளமாக உள்ள சர்வீஸ் ரோட்டில் பாய்கிறது. நான்கு நாட்களுக்கு முன் இங்குள்ள ஷட்டர் திறக்கப்பட்டு பனையூர் வாய்க்கால் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இன்றும், நாளையும் (நவ.20, 21) தண்ணீர் செல்ல வேண்டும். ஷட்டர் திறக்கப்பட்டதால் அழுத்தம் காரணமாக தண்ணீர் ஆற்றில் இருந்து சர்வீஸ் ரோட்டிற்கு செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பாலத்தை கட்டியது தேசிய நெடுஞ்சாலைத்துறை, பராமரிப்பது மாநகராட்சி, ஆற்றை பராமரிப்பது நீர்வளத்துறை. இதனால் தண்ணீர் வரும் போதெல்லாம் யார் சரிசெய்வது என்கிற பிரச்னை எழுகிறது. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நீர்வளத்துறை சார்பில் ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பாலத்தின் கீழ் உள்ள சிறிய குழாய்களை அகற்றி விட்டு 4 அல்லது 5 மீட்டர் விட்டத்தில் பாலத்தின் முன், நடு மற்றும் பின் பகுதியில் பெரிய குழாய்களை அமைக்க வேண்டும். அல்லது பயன்படுத்தாமல் இருக்கும் பாலத்தை இடித்து விட்டால் தண்ணீர் செல்வதற்கு தடை இருக்காது.மற்ற அனைத்து பாலங்களிலும் ரோட்டையொட்டி ஆற்றுப்பகுதியில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல இங்கும் சுவர் எழுப்பினால் ஆற்றில் வெள்ளம் வரும் போது சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் செல்லாமல் ஆற்றுக்குள்ளேயே செல்லும். அதிகபட்சம் வினாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் வந்தால் கூட தடுப்புச் சுவர் தாங்கும் என்பதால் சர்வீஸ் ரோட்டில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது.இந்த பரிந்துரையை நீர்வளத்துறை தெரிவித்திருந்தாலும் நிதியில்லாததால் செயல்படுத்த முடியவில்லை. மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலை துறை நிதி ஒதுக்கி நீர்வளத்துறையிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்.