மழையில்லாததால் விவசாயிகள் கவலை ஆடிப்பட்ட சாகுபடி ஆட்டம் காணுமோ
பேரையூர்: பேரையூர் தாலுகாவில்பருவநிலை மாற்றத்தால்ஆடிப்பட்டத்தில் விதைத்த பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருவதால் விவசாயிகள் முகமும் கவலையில் ஆழ்ந்துள்ளது.ஆடிப்பட்டம் தேடி விதை, ஆடி விதைப்பு ஆவணி நடவு என்ற முதுமொழிகளுக்கேற்ப விவசாயிகள் ஆடி பிறந்தவுடன்உழவுப் பணிகளை துவக்கி முக்கிய பயிர்களை பயிரிடுவர். இந்தாண்டு ஆடி பிறக்கும் போதே மழையும் பெய்ததால் விவசாயிகள் ஆர்வமுடன் மக்காச்சோளம், பருத்தி, சோளம், கம்பு உளுந்து, பயிறு வகைகளை விதைத்தனர். விதைத்த விதைகள் நன்கு முளைத்து பயிர்களாக மாறின. ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக காற்று அடிக்க வேண்டிய காலத்தில்மழையும், மழை வேண்டிய நேரத்தில் வெயிலும் என நிலைமை மாறியதால் விவசாயம் பாதித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் பயிர்கள் காயத் தொடங்கியுள்ளன. போர்வெல் தண்ணீர் மூலம் சாகுபடி செய்த பயிர்கள் மட்டுமே ஓரளவு வளர்ந்துள்ளது. மானாவாரிப் பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. களை எடுக்க வேண்டிய தருணம் என்றாலும், மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் அப்பணியையும் தொடர முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும், இல்லையெனில் பயிர்கள் பதராகிவிடும். இதனால்இந்தாண்டின் ஆடிப்பட்டம் ஏமாற்றி விடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.