மின்கம்பம், மரங்களில் விளம்பர போர்டுகள் பணியாளர்கள் அவதி
திருநகர்: திருநகரில் மூணாவது பஸ் ஸ்டாப் முதல் எட்டாவது பஸ் ஸ்டாப்வரை அரசு டவுன் பஸ்கள் செல்லும் மெயின் ரோட்டின் நடுவில் மின் கம்பங்கள், ரோட்டோரங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. அந்த மின் கம்பங்களில் தனியார் விளம்பர போர்டுகள் கட்டப்பட்டுள்ளன. பல மின்கம்பங்களில் கீழிருந்து மையப்பகுதி வரை போர்டுகள் உள்ளன. அந்த மின் கம்பத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், மின் பணியாளர்கள் மேலே ஏறிச் செல்ல சிரமம் அடைகின்றனர்.அப்போது மின் கம்பத்தில் உள்ள விளம்பர போர்டுகளை கழற்றி வைத்துவிட்டு, மேலே ஏறி செல்கின்றனர். இதனால் பணிப்பளு அதிகரிப்பதால், ஆபத்தான நிலையில் அவதிக்கு உள்ளாகின்றனர். மரங்களிலும் போர்டுகள்:
பெரும்பாலான மரங்களில் விளம்பர போர்டுகளை ஆணிகள் அடித்து மாட்டி வைத்துள்ளனர். இதனால் மரங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மரம் வளர்க்க எவ்வளவு காலம், சிரமம் ஏற்படும் என்பதை உணராமல் ஆணி அடித்து மரங்களின் இயற்கை தன்மையை கெடுப்பது சரியல்ல என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.