மதுரையில் 4 ஹோட்டலுக்கு இ-மெயிலில் குண்டு மிரட்டல்
மதுரை : காந்தி ஜெயந்தி தினமான நேற்று காலை சின்னசொக்கிகுளம் ஜெ.சி., ரெசிடென்ஸி, காளவாசல் ஜெர்மானுஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் மதுரை ரெசிடென்ஸி, பெருங்குடி அமீகா ஆகிய ஹோட்டல்களுக்கு அடுத்தடுத்து இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவுப் போலீசார், 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மோப்பநாயும் பயன்படுத்தப்பட்டது. எந்த ஹோட்டலிலும் எவ்வித வெடி பொருட்களும் இல்லை என தெரிந்தது.போலீசார் கூறியதாவது: மதுரையில் உள்ள சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கடந்த திங்கள் கிழமை, இதே ஸ்டைலில் மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது ஹோட்டல்களை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளனர். விசாரணை துவங்கியுள்ளது. மிரட்டல் விடுத்தது குறித்து, முழுமையாக விசாரித்து வருகிறோம்.இந்த இ-மெயில்கள் போலி முகவரிகளில் இருந்து வந்துள்ளன. இதனால் மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறப்பு தனிப்படை விசாரணையில் இறங்கியுள்ளது. இவ்வாறு கூறினர்.இ-மெயில் மிரட்டல் கலாசாரம், மதுரை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.