உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலை ஆய்வாளர் பணியிட பிரச்னை தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் டி.என்.பி.எஸ்.சி.,க்கு தேர்வாளர்கள் வலியுறுத்தல்

சாலை ஆய்வாளர் பணியிட பிரச்னை தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் டி.என்.பி.எஸ்.சி.,க்கு தேர்வாளர்கள் வலியுறுத்தல்

மதுரை : 'சாலை ஆய்வாளர் பணியிடங்கள் நியமனத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை, டி.என்.பி.எஸ்.சி., தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்' என தேர்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.2023 ஜனவரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் சாலை ஆய்வாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்) 894க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இத்தேர்வில் பங்கேற்க ஐ.டி.ஐ., தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் 2016, பிரிவு 25-ல் குறிப்பிட்டபடி, இத்தேர்வில் டிப்ளமோ, சிவில் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து 2023 மே 7 ல், தேர்வு முறையாக நடந்தது. அதன்பின், இத்தேர்வு ஐ.டி.ஐ., முடித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என சில ஐ.டி.ஐ., மட்டும் முடித்த மாணவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 1.6.2023ல் இத்தேர்வு ஐ.டி.ஐ., முடித்த மாணவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து தேர்வு எழுதிய டிப்ளமோ, சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மேல்முறையீடு செய்தனர். இதேபோல டி.என்.பி.எஸ்.சி.,யும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையும் இத்தேர்வுக்கு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு மட்டுமின்றி அறிவித்தபடி ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும்தான் என்று தெரிவித்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு ஓராண்டுக்குப் பின் கடந்த 13.08.2024ல் முதன்முறையாக விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல் விக்டோரியா கவுரி ஆகியோரைக் கொண்ட இருநீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டு, அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங் மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ''எதிர் மனுதாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு மீண்டும் டிச.9ல் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இவ் விவகாரத்தில் உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, அறிவிப்பில் திருத்தம் செய்வதோ, முடிவுகளை வெளியிடுவதோ வேண்டாம்'' என டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இன்று (அக்.28) நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி., கூட்டத்தில் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து ஆலோசித்து முடிவெடுக்குமாறும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை