அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் மூலம் ஏற்றுமதியை அதிகப்படுத்தலாம்
மதுரை : அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கலாம்,'' என, மதுரையில் நடந்த ஏற்றுமதி திருவிழாவில் சென்னை அஞ்சலக ஏற்றுமதி சேவை மைய கண்காணிப்பாளர் கல்யாணிசுந்தரி தெரிவித்தார்.அவர் பேசியதாவது: அஞ்சல் துறையைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியில் இன்னமும் தடம் பதிக்க வேண்டிய எவ்வளவோ பிரிவுகள் உள்ளன. மும்பை, டில்லி, பஞ்சாப் அதிகமாக ஏற்றுமதி செய்கின்றன. 2024 ல் மட்டும் தமிழகத்தில் 250 புதிய ஏற்றுமதியாளர்களை பதிவு செய்துள்ளோம்.தென் மாவட்டங்களில் ஏற்றுமதியாளர்கள் எண்ணிக்கை குறைவு. பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தேடி அலையாமல் அஞ்சலக துறையை பயன்படுத்தலாம். தமிழகத்தில் 66 தபால் நிலையங்களை ஏற்றுமதி சேவை மையங்களாக அடையாளப்படுத்தியுள்ளோம். வீட்டிலிருந்தே லேப்டாப்பில் ஆன்லைன் மூலம் ரசீது தயாரித்து ஆவணப்படுத்தி அருகிலுள்ள அஞ்சலக ஏற்றுமதி சேவை மையங்களுக்கு சென்று பார்சலை கொடுத்தால் போதும்.பெரும்பாலான நாடுகளுக்கு அனுப்பப்படும் மூன்றில் இரண்டு பங்கு பார்சல்கள் 2 கிலோ அளவில் அனுப்பப்படுகின்றன. அஞ்சலக துறையில் 50 கிராம் முதல் 20 கிலோ வரையும் சில நாடுகளுக்கு 30 கிலோ வரையும் பொருட்களை அனுப்பலாம். கப்பல் போக்குவரத்துடன் ஒப்பிடும் போது அனுப்புவதற்கான செலவும் மிகக்குறைவு.இதனால் பொருட்களுக்கு உரிய விலைக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். விலை மதிப்புள்ள எவ்வளவு பொருளையும் கட்டுப்பாடின்றி ஏற்றுமதி செய்யலாம்.அஞ்சலக துறை மூலம் 212 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். 67 நாடுகளுக்கு அனுப்பும் பொருட்களை எந்தெந்த நாடுகள் வழியாக எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பது வரை கண்காணிக்கும் வசதிகள் உள்ளதால் வாடிக்கையாளரிடம் பொருள் எந்த இடத்தில் உள்ளது என்பது வரை தெரியப்படுத்த முடியும். மேலும் ஜி.எஸ்.டி., வரிக்கான பணம் (ரீபண்ட்) தானாக வந்து விடும். ஏற்றுமதி இறக்குமதி கோடு (ஐ.இ.சி.,), ஜி.எஸ்.டி., எண், வங்கிக் கணக்கு இருந்தால் போதும்.வேளாண் விளைபொருட்கள், சிறுதானியங்கள், பத்தமடை பாய், கூடைகள், தஞ்சாவூர் பொம்மை போன்ற கைவினைப் பொருட்களுக்கான மார்க்கெட்டிங் உள்ளதால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம். இந்தியர்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் ஏற்றுமதிக்கான தேவை அதிகமாக உள்ளது. புதிய ஏற்றுமதியாளர்கள் அதிகரிக்கும் போது அந்தந்த மாவட்டத்தில் அஞ்சலகத்தை ஏற்றுமதி சேவை மையமாக மாற்றலாம் என்றார்.ஸ்பைசஸ் போர்டு உதவி இயக்குநர் செந்தில்குமரன் பேசுகையில், இந்தியாவில் 52 வகையான நறுமணப் பயிர்களை ஏற்றுமதி செய்யலாம். தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு, ராமநாதபுரம் மிளகாய், கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள் உட்பட 26 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நல்ல மார்க்கெட் வாய்ப்புள்ளது.ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக தரப்பரிசோதனை செய்வது அவசியம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் நறுமணப் பயிர்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது,'' என்றார்.