ஷட்டர் வேலை செய்யாததால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை விவசாயிகள் விரக்தி
மேலுார்: இ.மலம்பட்டி இலுப்பகுடி கண்மாயில் தண்ணீர் இருந்து வெளியேறும் மடையில் 'ஷட்டர்' பழுதானதால் பாசன நீரை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இ.மலம்பட்டியில் 20 ஏக்கர் பரப்பில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இலுப்பக்குடி கண்மாய் உள்ளது. இக் கண்மாய், 9 வது கால்வாய், அட்டப்பட்டி சிறுவன கண்மாய் ஓடை ஆகிய 2 வழிகளில் வரும் தண்ணீரால் நிரம்பும். இங்கிருந்து 2 மடைகள் வழியாக தண்ணீர் வெளியேறும். அதன் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இக்கண்மாயில் தண்ணீர் வெளியேறும் மடையில் உள்ள ஷட்டர் வேலை செய்யவில்லை. அதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சோகத்தில் விவசாயிகள் உள்ளனர்.விவசாயி அன்பழகன் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டு 45 நாட்கள் ஆகிறது. கதிர் பிடிக்கும் நிலையில் தண்ணீர் இன்றி கருக ஆரம்பித்துள்ளது. குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால்தான் மகசூல் கிடைக்கும். காலம் தவறினால் மகசூல் குறையும். இதுவரை மழை நீரை கொண்டு விவசாயத்திற்கு பயன்படுத்திய நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன. ஷட்டர் பழுது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஓராண்டாக வலியுறுத்தியும் பலனில்லை. கேட்டால் பொறுப்பற்ற பதிலளிக்கின்றனர். கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என்றார்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், ''ஷட்டர் பழுது குறித்து தற்போதுதான் தெரிய வருவதால் உடனே சரி செய்யப்படும் என்றார்.