| ADDED : டிச 27, 2024 05:18 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் தொடர் மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இதில் ஆண்டுக்கு ஒரு போக விவசாயம் என்ற நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கிணறுகள் போர்வெல் நீரை பயன்படுத்தி இறவை பாசனம் நடக்கிறது. கடந்த 2 மாதங்களில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.ஆனால் கண்மாய்களுக்கு கொஞ்சமும் நீர் வரத்து இல்லை. இந்த மாதம் தொடர்ச்சியாக 4 நாட்கள் மழை பெய்தும், கண்மாய்களுக்கு போதுமான நீர் வரத்து இல்லாததால் கண்மாய்களை நம்பியிருக்கும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நீர்வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லை. இதனால் கண்மாய்களில் நீர் தேங்க வில்லை. ஊர்களையொட்டிய கண்மாய்கள் குப்பை தொட்டியாகவும், கழிவுநீர் தேங்கும் மையமாகவும் உள்ளன.வரத்துக் கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் 20 மீட்டரில் இருந்து 2 மீட்டராக குறுகிவிட்டன. ஓடைகளில் ரோடு அமைக்கும்போது பாலம் கட்டாமல் அமைப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி போகிறது.உதாரணமாக தொட்டணம்பட்டியில் இருந்து சாப்டூர் கண்மாய்க்கு ரோடு அமைத்தனர். இதில் இடையில் பாலம் கட்டாமல் ஓடையை மறித்து ரோடு அமைத்ததால் தண்ணீர் தேங்குகிறது.மேலும் பல வரத்து ஓடைகளில் புதர் மண்டிக் கிடக்கிறது. இதுபோன்ற காரணங்களால் சின்ன, பெரிய பூலாம்பட்டி கண்மாய்கள், குடிசேரி, சின்னாரெட்டிபட்டி, கூவலப்புரம் உட்பட நுாற்றுக் கணக்கான கண்மாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறுமையாக காட்சியளிக்கின்றன.கிணற்றுப் பாசனத்தை நம்பி பலரும் நெல், காய்கறிகள், மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும், கண்மாயில் தண்ணீர் இருந்தால்தான் பயிரிட்டவற்றில் முழுமையாக மகசூல் பெற முடியும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதியில், மழைநீரை கண்மாய்களில் தேக்கவும் நடவடிக்கை இல்லை.நீர் தேக்குவதற்கான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து, வரும் காலங்களிலாவது நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.