தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பரங்குன்றம்: 'தினமலர் செய்தி எதிரொலியாக தென்கால் கண்மாயின் நடுமடைப் பகுதி சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் வாகன போக்குவரத்திற்காக தார்ச் சாலை பணியின் போதுகண்மாயின் நடு மடை சேதப்படுத்தப்பட்டது. அந்த மடையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் அவனியாபுரம் வரை 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சாலை பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாததால் நடுமடை வழியாக வெளியேறும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருக துவங்கின.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீர்வளத் துறை சார்பில் மடைப்பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முதல் நடுமடை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் காப்பாற்றப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.