உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பனைவிதைகளால் கண்மாய்களை காக்கும் விவசாயிகள்

பனைவிதைகளால் கண்மாய்களை காக்கும் விவசாயிகள்

மதுரை: அரசிடம் இருந்து மானியம் பெறும் விவசாயிகள் முதன்முறையாக கண்மாய்களை காக்கும் வகையில் பனை விதைகள் கொடுத்து உதவ முன்வந்துள்ளனர்.கடந்த வாரம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. நீர்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து கண்மாய்களில் பனை விதைகள் நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள பனை விதைகளை இலவசமாக தரலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார். பங்கேற்ற மதுரை கிழக்கு கார்சேரி விவசாயி குணசேகரன் ஒரு டிராக்டர் அளவு பனை விதைகளை இலவசமாக தருவதாக தெரிவித்தார். தற்போது 3,500 விதைகளை இலவசமாக வேளாண் துறைக்கு குணசேகரன் வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது: கார்சேரியில் தாத்தா பாக்கியம் நட்ட 150 பனை மரங்களை அப்பா ராஜாமணி, தொடர்ந்து நான் பராமரித்து வருகிறேன். மானாவாரியில் வறட்சியால் பயறு சாகுபடியை நிறுத்தினாலும் இருக்கும் பனை மரங்களை அழியாமல் பாதுகாக்கிறேன். மரத்தில் இருந்து நுங்கு எடுப்பதில்லை. அவை பனம்பழமாகி கீழே விழும். மாடுகள் அப்பழத்தை தின்று கொட்டையை துப்பிவிடும். இப்படி 3500 விதை கொட்டைகளை சேகரித்து கொடுத்தேன். இன்னும் 2000 கொட்டைகள் சேகரித்து வருகிறேன். ஒரு மரத்தில் இருந்து அதிகபட்சம் 500 விதைகள் கிடைக்கும் என்பதால் எங்களைப் போன்ற விவசாயிகள் தாராளமாக விதைகளை கொடுத்து உதவலாம் என்றார். மதுரை மாவட்டத்தில் வேளாண் துறைக்கு 1.5 லட்சம், தோட்டக்கலைக்கு ஒரு லட்சம், வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைக்கு தலா 50ஆயிரம் பனை விதைகள் விவசாயிகளிடம் இருந்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் தேவைக்கு போக மீதியுள்ள பனை விதைகளை அந்தந்த வட்டார அலுவலகங்களில் ஒப்படைத்தால் பனைமரங்களின் எண்ணிக்கை மதுரையில் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை