நெல் கொள்முதல் மையம் அமைப்பதில் விவசாயிகள் மோதல் வேண்டாம்...
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நெல் கொள்முதல் மையத்தை தனியாருக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பும், மாற்றக்கூடாது என ஒரு தரப்பும் வாக்குவாதம் செய்தனர். காலை 10:00 மணிக்கே கூட்டம் துவங்கினாலும் விவசாயம் அல்லாத விஷயங்களை மதியம் 2:00 மணி வரை விவாதிப்பதாக அரசு அதிகாரிகள் புலம்பினர்.கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் சாந்தி, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிராஜா கலந்து கொண்டனர்.மதுரை மாவட்டத்தில் பூச்சி, நோய் தாக்குதலால் நெல் உட்பட அனைத்து பயிர்களின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் மையத்தில் மூடைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை கமிஷன் வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்ததும் 'பணம் கொடுக்காதீர்கள்' என்று எத்தனை முறை சொல்வது என கலெக்டர் கடிந்து கொண்டார். அதற்காக தான் தனியார் மையம் அமைக்க வேண்டும் என சில விவசாயிகள் தெரிவித்ததும் மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மையத்தில் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் நெல்லை புறக்கணிப்பதாக வாடிப்பட்டி அய்யங்கோட்டை முருகன் கதறினார். உடனடியாக அம்மையம் குறித்து அதிகாரிகள் மூலம் கலெக்டர் விசாரித்த போது முருகனின் தங்கை பெயரில் 92 மூடைகள் அய்யங்கோட்டை மையத்தில் விற்கப்பட்டதாகவும் அவரது பெயரில் நெல் குவியல் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.மாங்குளம் பகுதி விவசாய கிணறுகளில் உள்ள மின்மோட்டார்களின் ஒயர்கள் திருடப்படுவதாகவும் ஒத்தகடை போலீஸ் ஸ்டேஷனில் 15 புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தேனி உத்தமபாளையம் பகுதியில் புதிய ஆயக்கட்டுக்கு பாசனப்பாதை அமைத்தால் மேலுார் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காது என்பதால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் விவசாய போர்ட்டலில் பதிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை மதுரையில் தான் குறைவு என்பதால் விவசாய சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.வைகை அணையை துார்வாருவது குறித்து செயற்பொறியாளர் பாரதிதாசன் கூறுகையில்,''உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி வைகை அணையில் 40 அடிக்கு கீழே நீர் இறங்கும் போது தேனியைச் சுற்றியுள்ள 72 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வண்டல் மண் துார்வாரி அகற்றப்படும். முதற்கட்டமாக ஒரு டி.எம்.சி., அளவு வண்டல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அதிகாரிகள் புலம்பல்
காலை 10:00 மணிக்கு கூட்டம் துவங்கி 12:00 மணிக்கு மனுக்கள் வாசிப்பு முடிந்தது. அடுத்து தாலுகாவுக்கு இருவர் வீதம் அப்பகுதி விவசாய பிரச்னைகளை பேச அனுமதி வழங்கப்பட்டது. சிலர் விவசாயம் சாராத பொது பிரச்னைகளை பேசி விவாதம் செய்ததால் மதியம் 2:00 மணி வரை கூட்டம் நடந்ததால் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள் புலம்பினர். மீண்டும் ஆக்கிரமிப்பு குறித்த கூட்டம் உடனடியாக துவங்கியதால் 'டென்ஷன்' ஆனதோடு சோர்ந்தும் போயினர். விவசாயம் சாராத பொது விஷயங்களை தவிர்த்தால் மதியம் 1:00 மணிக்கு கூட்டம் நிறைவடையும் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர்.