வயலில் தோண்டுகால் வசதி செய்த விவசாயிகள்; புயல் எச்சரிக்கையால் அலங்காநல்லுாரில் அலர்ட்
மதுரை: அலங்காநல்லுார் கோட்டைமேடு கிராமத்தில் முதல்போக சாகுபடி நெல் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து வயல்களில் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயி பிரபாகரன் கூறியதாவது: புயல் காரணமாக கூடுதல் மழையை எதிர்பார்க்க முடியும். எங்கள் பகுதியில் 200 ஏக்கர் அளவிற்கு நெல் வயல்கள் அறுவடைக்கு காத்திருக்கின்றன. இன்னும் 20 நாட்களில் அறுவடை தொடங்கிவிடும். தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட்டோம். தாழ்வான பகுதியில் வயல்கள் இருப்பதால் மழை தொடர்ந்து பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கினால் நிலம் ஈரமடைந்து அறுவடை செய்ய முடியாது. இயந்திரத்தை பயன்படுத்தினாலும் அறுவடையின் போது 5 சதவீத நெற்கதிர்கள் சகதியில் சிக்கி வீணாகும். இதுபோன்ற புயல், மழை எச்சரிக்கை காலங்களில் வயலைச் சுற்றி தோண்டுகால் வசதி செய்வது வழக்கம். எனது 5 ஏக்கர் வயலைச் சுற்றி வரப்புக்கும் நெற்கதிருக்கும் இடையில் சிறு அகழி போல பள்ளம் தோண்டியுள்ளேன். இதனால் ஒருவரிசை நெற்கதிர்கள் வீணாகலாம் என்றாலும் வெள்ளம் வந்தால் தோண்டுகால் வழியே தண்ணீர் வெளியேறி ஓடையில் கலந்து விடும். நெற்கதிர்களுக்கு சேதாரம் ஏற்படாது. முறையாக அறுவடை செய்தால் ஏக்கருக்கு 40 மூடை கிடைக்கும். வடிகால் வசதி செய்யாவிட்டால் மழை பெய்து ஏக்கருக்கு 5 மூடை நெல் வீணாகி மொத்தத்தில் ரூ.25ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும். அதற்கு பதிலாக 10 பேரைக் கொண்டு ஒரே நாளில் 5 ஏக்கர் நிலத்திலும் தோண்டுகால் வசதி செய்தேன். இதற்கு ரூ.5000 செலவானது. நெற்கதிர்கள் காப்பாற்றப்படும் என்பதால் இது நஷ்டமாகாது. கோட்டைமேட்டில் உள்ள விவசாயிகள் இதுபோன்று தோண்டுகால் வசதி செய்துள்ளனர் என்றார்.