சிறைகளை தொடர்ந்து பிற துறைகளும் கூட்டுறவு பண்டகசாலையில் உணவுப்பொருள் வாங்க உத்தரவு; தினமலர் செய்தி எதிரொலி
மதுரை: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு உணவுப்பொருட்கள் வாங்கியதில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் வாங்க டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக உணவுப்பொருட்கள் வாங்கும் பிற துறைகளும் கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக சிறைகளில் கைதிகளுக்கு 'பேக்கிங்' செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. சந்தை விலையைவிட பல மடங்கு விலை நிர்ணயிக்கப்பட்டதால் சிறைத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையறிந்த துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், பழைய முறைபடி சிறைகள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை மூலம் வாங்க உத்தரவிட்டார்.இதுகுறித்து தினமலர் நாளிதழ் மே 6ல் செய்தி வெளியிட்டது. இதைதொடர்ந்து அனைத்து சிறைகளிலும் கடந்த 2 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் பட்டியல், விலை விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் 7 ஆண்டுகளாக பொருட்கள் வாங்கப்பட்டு வந்ததால், அந்த 7 ஆண்டுகளில் வாங்கப்பட்டவை, விலை விபரம் குறித்து சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில் தினமும் உணவுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கும் அரசு விடுதிகள் மற்றும் அரசு உணவகங்கள் உள்ளிட்டவைகளும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை மூலமே உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்க வேண்டும் என அந்தந்த துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.பல கோடி வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.