முதல்வர் ரோடு ேஷாவால் பலனில்லை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
மதுரை: 'விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோவால் பலனிருக்காது' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்தார்.அவர் கூறியதாவது: காகிதப்பூ மணக்காது என்பதை போல முதல்வர் ஸ்டாலின் விருதுநகரில் நடத்திய ரோடு ஷோ மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. இதற்கு மூன்றரை ஆண்டுகால ஆட்சியின் காட்சிகள் சாட்சிகளாக இருக்கின்றன .2021 ஆண்டில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 25 சதவீதம் முதல் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆனால் மக்களுக்கு தரவேண்டிய சாலை, குடிநீர், பாதாள சாக்கடை, சுகாதாரம், கல்வி வசதியை உயர்த்தி தந்தார்களா வரியை உயர்த்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயர்த்தப்படும் என்கிற செய்தியை அறிவிக்கின்றனர்.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் அறிவித்த லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை. மதுரைக்கு 10 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. பழனிசாமி முதல்வராக இருந்தபோது வரி உயர்வை அமல்படுத்தவில்லை. அரசே ஏற்றுக்கொண்டது, மின்கட்டண உயர்வை 8 ஆண்டுகளாக உயர்த்தவில்லை. மீண்டும் அவர் தமிழகத்தின் முதல்வராக வருவார், அப்போது மக்கள் சுமையை தன் சுமையாக ஏற்பார்.இன்று அனைத்து தரப்பினரும் போராடுகின்றனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது போராட்டத்திற்கு ஓடோடி சென்று ஆதரவு தந்த ஸ்டாலின் எங்கே, என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் கேட்கிறார்கள். அவரை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில்தான் அமர வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.