உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நன்னீர் அலங்கார மீன்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்

நன்னீர் அலங்கார மீன்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்

மதுரை: ''இந்தியாவின் நன்னீர் அலங்கார மீன்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அவற்றின் உற்பத்தியை பெருக்க வேண்டும்'' என மத்திய அரசு சார்பில் மதுரையில் நடந்த அலங்கார மீன்வளர்ப்பு கருத்தரங்கில் ஒடிசாவின் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவன இயக்குநர் சரோஜ்குமார் ஸ்வைன் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

வண்ண மீன் வளர்ப்பு என்றால் வெளிநாட்டு மீன்களை வாங்கி வந்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வதல்ல. இந்தியாவில் வடகிழக்கு மலைத்தொடர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எண்ணற்ற அலங்கார மீன்கள் நன்னீரில் வாழ்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தங்கநிற (கோல்டன் பிஷ்) மீன்கள் நன்னீரில் வளர்கின்றன. இவற்றை அதன் இயல்பு கெடாமல் உற்பத்தி செய்து விற்கலாம்.

மிகவும் விரும்புகின்றனர்

இந்தியாவில் நன்னீரில் வளரும் அலங்கார மீன்கள் பல்வேறு வண்ணங்களில் மனதை கவரும் வகையில் உள்ளன. இதற்கு இந்திய சந்தையில் மட்டுமல்ல ஏற்றுமதி செய்யும் போது நல்ல விலை கிடைக்கிறது. அமெரிக்கா, ஜப்பான் உட்பட வெளிநாட்டினர் இந்திய அலங்கார மீன்களை மிகவும் விரும்புகின்றனர்.இதனால் சில ஏற்றுமதியாளர்கள் இயற்கையான நன்னீர் பகுதியில் இருந்து அலங்கார மீன்களை சேகரித்து நேரடியாக ஏற்றுமதி செய்கின்றனர். இதன் காரணமாக மீன்களின் எண்ணிக்கை குறைந்து அழிவின் விளிம்பிற்கு செல்கின்றன. மத்திய அரசின் பல்வேறு மீன்வளர்ப்பு நிறுவனங்கள் இவற்றை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

அழிவின் விளிம்பில் மீன்கள்

ஏற்றுமதியாளர்களும் உற்பத்தியாளர்களும் இந்திய நன்னீர் அலங்கார மீன்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட வேண்டும். இயற்கையான வாழ்விடத்தில் உள்ள மீன்களை மீன்பண்ணை தொட்டிகளில் வளர்க்கும் போது அவற்றின் இயல்புக்கேற்ப உற்பத்தியை பெருக்க வேண்டும்.இதுவே இயற்கையான நன்னீர் அலங்கார மீன்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லும் எளிய வழி என்றார்.கருத்தரங்கு ஏற்படுகளை தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் செய்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை