உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதி மாற நிதி வேணும்: பெருமழை வந்தால் செல்லுார் கண்மாய்க்கு ஆபத்து வரலாம்

விதி மாற நிதி வேணும்: பெருமழை வந்தால் செல்லுார் கண்மாய்க்கு ஆபத்து வரலாம்

மதுரை: முதல் சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்தபடி மதுரை செல்லுார் கண்மாய் சீரமைப்புக்கு இதுவரை நிதி ஒதுக்காத நிலையில், வெள்ளம் வந்தால் கண்மாய் உடையும் அபாயம் உள்ளது. மதுரை செல்லுார் கண்மாய் 1050 மீட்டர் நீளமுடையது. நேரடி ஆயக்கட்டு பகுதியாக இருந்த கண்மாய்க்கு தத்தனேரி கண்மாய் வழியாக உபரிநீர் கிடைக்கிறது. இதற்கு இரண்டு மடைகள் இருந்தன. செல்லுார் பகுதி குடியிருப்புகளாக மாறியதால் மடைகள் தானாக அடைபட்டுப் போயின. இதை கைவிடப்பட்ட கண்மாயாக நீர்வளத்துறை அறிவித்தது.

செல்லுாரை அழித்த வெள்ளம்

பாசனத்திற்கு பயன்படாவிட்டாலும் தற்போது வரை இத்துறையின் கட்டுப்பாட்டில் கண்மாய் உள்ளது. மடைகள் அடைபட்டதால் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதற்காக ஒரு கலுங்கின் வழியாக வினாடிக்கு 75 கனஅடி நீர் வெளியேறும் வசதி செய்யப்பட்டது.கடந்த 1996 பெருமழையால் வெள்ளம் வந்த போது இங்குள்ள சிறிய கலுங்கு வழியாக தண்ணீர் வெளியேற முடியாமல் கண்மாய் உடைந்து வெள்ளம் வெளியேறியது. செல்லுார் பகுதி குடியிருப்புகள், மீனாட்சி அரசு கல்லுாரி, மதுரை அரசு மருத்துவமனை வரை வெள்ளம் சூழ்ந்தது. எனவே பத்தாண்டுக்கு முன் கண்மாயின் வலது ஓரத்தில் வெள்ளநீர் வெளியேற 5 ஷட்டர்கள் வைக்கப்பட்டன. ஆனால் ஷட்டரில் இருந்து 240 மீட்டர் துாரத்தில் உள்ள வைகையாற்றில் வெள்ளநீர் வடிவதற்கென வாய்க்கால் தோண்டவில்லை. இந்த வழியாக ரோடு செல்வதால் ரோட்டை தோண்டி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி மேற்பகுதியில் வாகனங்கள் செல்ல (கட் அன்ட் கவர் சானல்) திட்டமிடப்பட்டது. நிதியில்லை என்ற காரணத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

முதல்வர் அறிவித்த நிதி

முதல்வர் ஸ்டாலின் 2021 ல் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் செல்லுார் கண்மாய் சீரமைப்பு, ஷட்டரில் இருந்து வைகையாறு வரையான 240 மீட்டர் துார வாய்க்கால், 2.6 கி.மீ., நீளத்திற்கான பந்தல்குடி கால்வாயை சீரமைத்தல் உட்பட பல பணிகளுக்கு ரூ.84 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்தார். மூன்றாண்டுகளாகியும் நிர்வாக அனுமதி கிடைக்காததால் நிதியும் கிடைக்கவில்லை.செல்லுார் கண்மாயின் நடுவே மதுரை - சென்னை வழித்தடம் உள்ளது. 1996 ல் வெள்ளம் வந்தபோது பல மணி நேரம் ரயில்சேவை முடங்கியது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மழையால் வெள்ளம் அதிகரித்தால் கண்மாய் உடையும் அபாயம் உள்ளது. எனவே தாமதிக்காமல் ஒப்புதல் அளித்த நிதியை விடுவிக்க அரசு முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
அக் 07, 2024 11:39

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.


முக்கிய வீடியோ