குப்பை கோடவுனா பேரூராட்சி வளாகம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளைக் குவித்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இங்கு பேரூராட்சி நுழைவாயிலில் பழைய கட்டடம் அருகே பெரியளவில் சேதமடைந்த குடிநீர் தொட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதைச்சுற்றி செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சியளிக்கின்றன. வீடுவீடாக டெங்கு கொசு உற்பத்தியை ஆய்வு செய்ய தொட்டிகளையும், வாளிகளையும் ஆய்வு செய்யும் பேரூராட்சிப் பணியாளர்கள், தங்கள் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த தொட்டிகளில் தேங்கும் தண்ணீரை கண்டு கொள்வதில்லை. இந்தத் தொட்டிகளில் தேங்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதுடன், உற்பத்தியாகும் கொசுக்களால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அலுவலகத்திற்கு வருவோர் முகம் சுளிக்கின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கையெடுத்து தொட்டிகளை முறையாக அகற்ற வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.