ஆமை வேகத்தில் கிரிவல ரோடு பணிகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முதல் மலையை சுற்றி 3.25 கி.மீ., கிரிவல ரோடு உள்ளது. பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். தினமும் காலை, மாலையில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் நடைப்பயிற்சியும் மேற்கொள்கின்றனர். கிரிவல ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பவுர்ணமி நாட்களில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கிரிவல ரோட்டில் பக்தர்களுக்காக தனிப் பாதை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் மூலதன மானிய நிதி ரூ.2 கோடியில் 3 கி.மீ.,க்கு கிரிவலம் ரோட்டின் இருபுறமும் தலா 1.5 மீ., அகலம், 0.5 மீட்டர் உயரத்தில் பேவர் பிளாக் நடைமேடை அமைக்கும் பணி ஓராண்டுக்கு முன் துவங்கியது. இப்பணிகள் ஓராண்டாக ஆமை வேகத்தில் நடக்கிறது. பல இடங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதங்களாகியும் பணிகள் முழுமை அடையவில்லை. பல இடங்களில் தோண்டிய பள்ளங்கள் மூடப்படாமல் கிடக்கிறது. பல பகுதிகளில் பணிகள் துவங்கவே இல்லை. இதனால் கிரிவல பக்தர்களும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை என, பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.