அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: சென்னையில் அரசு டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி முன்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் இளமாறன் தலைமை வகித்தார். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் போலீஸ் நிலையங்களை அதிகரிப்பதோடு, அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். 'அட்டெண்டர் பாஸ்' வழங்குவதன் மூலம் நோயாளிகளின் உறவினர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.அவசர சிகிச்சை வார்டுகளில் உறவினர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வரையறை செய்து அரசாணை வெளியிட வேண்டும். ஏற்கனவே சங்கம் பரிந்துரைத்த நடவடிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க நிர்வாகிகள் செல்வராணி, ரமேஷ், சரவணன், சந்தோஷ், கல்யாணசுந்தரம், நடராஜன், விஸ்வநாத பிரபு, குமாரதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.