உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலிப்பணியிடங்களின் உண்மை அறிந்து கூடுதல் இடங்களை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்

காலிப்பணியிடங்களின் உண்மை அறிந்து கூடுதல் இடங்களை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்

மதுரை: 'அரசு துறைகளில் காலிப்பணியிடங்களின் உண்மை நிலையை கணக்கிட்டு கூடுதல் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மதுரையில் அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தொகுதி 4 தேர்வுக்கு 3935 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. அரசுப் பணியை இலக்காக கொண்டு பல லட்சம் மாணவர்கள் காத்திருக்கும் சூழலில் அரசு துறைகளில் அதிக காலியிடங்கள் இருந்தும் சொற்ப எண்ணிக்கையில் அறிவிப்பு வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது. மேற்கண்ட 3935 பணியிடங்களுக்கும் தேர்வெழுதி மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், தேர்வு முறையிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் குழப்பம் காரணமாக காலியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பு வரும் என காத்திருந்த இளைஞர்களுக்கு வெறும் 727 பணியிடங்கள் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளதாக அறிவித்தனர். 2021 ல் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடத்தில் 3.5 லட்சம் பேர் நியமிக்கப்படுவர் என தெரிவித்தனர். ஆனால் நான்கரை ஆண்டுகளில் 68 ஆயிரத்து 39 பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரத்து 133 பணியிடங்கள் மட்டுமே நிரந்தர காலமுறை ஊதியத்திற்கானவை. மற்றவை தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்பு காலமுறை ஊதியம், அவுட்சோர்ஸிங் முறையில் நியமனம் செய்யப்பட்டவை. கடந்த பத்தாண்டுகளில் 2024 - 25 ல்தான் மிகக்குறைவான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு காத்திருப்போரில் மாற்றுத்திறனாளிகள், பெண்களே அதிகம். அரசுப் பணியில் உள்ளோரின் பணிச்சுமையை குறைக்கவும், தேர்வு எழுதி வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களின் கனவை நனவாக்கவும் அனைத்துத் துறையிலும் உள்ள காலியிடங்களை கணக்கிட்டு, கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ