வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.மதுரை மாவட்டம் கொக்குளம் கண்ணன் தாக்கல் செய்த மனு: வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் பிப்.1 ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.அரசு தரப்பு: வேங்கைவயலில் இருவரிடையே ஏற்பட்ட பிரச்னையால் சம்பவம் நடந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 389 சாட்சிகளிடம் விசாரித்துள்ளனர். 31 பேரிடம் டி.என்.ஏ., பரிசோதனை நடந்துள்ளது. 196 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலுள்ள ஆடியோ குரல் பதிவுகளின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டது. கழிவு கலந்த தண்ணீரை யாருக்கும் வினியோகிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதி இன்று (ஜன.29) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.