ரோட்டில் வீணான அரசு நிதி
சோழவந்தான்: ''சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் திட்டமிடல் இல்லாத ரோடு சீரமைப்பு பணியால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது'' என அப் பகுதியினர் குற்றஞ்சாட்டினர். இது குறித்து எட்டு ஊர் கமிட்டி தலைவர் ஜெயபாலன் கூறியதாவது: இரண்டு மாதங்களுக்கு முன் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குழாய்கள் பதிக்க விக்கிரமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் இருந்து ஒரு கி.மீ.,க்கும் கூடுதலாக பள்ளம் தோண்டினர். பணிமுடிந்தபின் சரியாக மூடாததால், அந்த மணலில் வாகனங்கள் அடிக்கடி புதைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தபின், 10 நாட்களுக்கு முன்பு பேவர் பிளாக் அமைக்கும் பணி நடந்தது. பள்ளங்களை கான்கிரீட் கலவையால் நிரப்பாமல் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இவ்வாறு பதித்த கற்கள் ஓரிரு நாட்களில் ஒரு அடிக்கும் கீழாக இறங்கி பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக உள்ளனர். இதில் ரூ.பல லட்சம் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இங்கு அக்.14 முதல் அக்.16 வரை முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடக்க உள்ளது. மூன்று கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் கூடுவர். ரோடு மோசமாக உள்ளதால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.