உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேம்பாலம், ரோடு பணியால் கண்மாய்களுக்கு பாதிப்பு ஏற்படாது உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மேம்பாலம், ரோடு பணியால் கண்மாய்களுக்கு பாதிப்பு ஏற்படாது உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை : மதுரை வண்டியூர் கண்மாயில் மேம்பால பணி, தென்கால் கண்மாயில் சாலைப் பணியால் இரு நீர்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து கோமதிபுரம் வரை 2.1 கி.மீ., துாரம் ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை துவக்கியது. இதற்காக வண்டியூர் கண்மாயை சேதப்படுத்தியுள்ளனர்.கண்மாயில் தண்ணீர் தேக்க இயலாத நிலை ஏற்படும். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கும், வண்டியூர் கண்மாயில் மேம்பாலம் கட்டுமான பணிக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு ஏற்கனவே விசாரித்தது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: இரு கண்மாய்களிலும் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.நீதிபதி பி.புகழேந்தி: மதுரை- திருமங்கலம் இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தென்கால் கண்மாய்க்கரை வழியாக இருவழிச்சாலை அமைக்கப்படுகிறது.வண்டியூர் கண்மாயில் தடுப்புச் சுவர்களை உயர்த்தி, தடுப்பணை பலப்படுத்தப்படுகிறது. கண்மாயில் நீரை சேமிப்பது பாதிக்கப்படாது.​இடைக்கால தடை உத்தரவு வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு உத்தரவிட்டார்.இருவரும் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்ததால் தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி மூன்றாவது நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அவர், 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் நான் உடன்படுகிறேன்.அரசு தரப்பு அளித்த உத்தரவாதப்படி இரு கண்மாய்களிலும் எவ்வித பணியும் மேற்கொள்ளக்கூடாது. இவ்வழக்கு ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்படுகிறது,' என உத்தரவிட்டார்.நேற்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்படுகிறது. நிபுணர்கள் ஆய்வு செய்து அவர்களின் பரிந்துரைப்படி பணி நடக்கிறது. நீர்நிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தென்கால் கண்மாய் பகுதியில் 48 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை