ஓலைச்சுவடிகளை பாதுகாக்க குழுமம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்களை பாதுகாக்க வாரியம் ஏற்படுத்த தாக்கலான வழக்கில், ஓலைச்சுவடிகளை பாதுகாத்து ஆவணப்படுத்த மாநில அளவில் சுவடிக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.தஞ்சாவூர் செந்தில்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக கோயில்களின் வரலாறு ஓலைச்சுவடி, கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. இவை தமிழர்களின் பண்பாடு, வரலாற்று ஆவணங்களாக உள்ளன.ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் 1 லட்சம் ஓலைச்சுடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதை கம்ப்யூட்டரில் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதாக அறக்கட்டளையின் இணையதளமே வெளியிட்டுள்ளது.இறையாண்மை பொருந்திய ஒரு அரசு இருக்கும் போது, தனியார் தொண்டு நிறுவனத்தை இவ்வாறு செய்ய அனுமதிப்பது ஏற்புடையதல்ல. தமிழர்களின் வரலாறு களவாடப் பட்டு, மாற்றியமைக்கப்படும். தமிழக அரசின் தொல்லியல்துறை, அறநிலையத் துறைக்கு அவப் பெயரை உண்டாக்கும்.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்கள், தமிழர் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய ஓலைச் சுவடிகளை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்களை பாதுகாக்க தனி வாரியம் ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் ரூபஸ் ஆஜரானார்.அரசு பிளீடர் திலக்குமார்: தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாத்து ஆவணப்படுத்த மாநில அளவில் சுவடிக் குழுமம் அமைத்து, நிதி ஒதுக்கீடு செய்து 2019 டிச.30ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.