குப்பையை எரிப்பதால் பாதிப்பு
அலங்காநல்லுார்,: வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதி, கண்மாய் கரை இடையே அய்யங்கோட்டை ஊராட்சி குப்பையை கொட்டி எரித்து வருவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.இந்த ஊராட்சி பகுதி வீடுகளில் சேகரிக்கும் குப்பையை துாய்மை பணியாளர்கள் தள்ளுவண்டிகளில் எடுத்து வருகின்றனர். இங்குள்ள இரு பக்க சர்வீஸ் ரோடுகளிலும் குப்பை கொட்டி தீ வைக்கின்றனர். நான்கு வழிச்சாலையில் புகை கிளம்பி துர்நாற்ற மண்டலமாக மாறுகிறது. கண் எரிச்சலும், சுகாதார பாதிப்பும் ஏற்படுகிறது. சர்வீஸ் ரோட்டோரம் கண்மாய், கால்வாய் கரையோரம் மேயும் கால்நடைகள் பாதிக்கின்றன. ரோட்டோரங்களில் பல மீட்டர் தொலைவுக்கு குப்பையை குவித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகமே இவ்வாறு செய்வதால், அதை வாய்ப்பாக பயன்படுத்தி தனியார் நிறுவனங்களும் கோழி இறைச்சி, செப்டிக் டேங்க் கழிவுகளையும் கொட்டுகின்றன. அலங்காநல்லுார் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.